சனி, ஜூலை 07, 2012

உங்களுக்கு ஓரு இரகசியம் தெரியுமா?

நமக்கு உடல் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நம் உடல் இலேசாக இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  நம் உடலில் ஏதாவது ஏற்பட்டுவிட்டால் மனம் அதை பற்றியே சிந்தனையில் இருக்கும். சரியானவுடன் அதைபற்றி மறந்துவிடும்.
நம் உடலோ மனமோ அடிப்பட்டுவிட்டால் அதைச் சுற்றியே நம் முழு ஆற்றலும் பாயும்.

உங்களுக்கு ஓரு இரகசியம் தெரியுமா? உடலில் எந்த நோய் இருந்தாலும் அதை மருந்து கொடுத்து சரி செய்யும் காலத்தைவிட, அதை தொந்தரவு செய்யாமல் இயற்கையிடமே விட்டுவிட்டால் ஆகும் காலம் குறைவு.

இப்பொழுது நம் உடலில் நோய் வந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். உடல் சார்ந்த பிரச்னை என்று எடுத்துகொண்டால் வலி, மருந்துகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடும் முயற்சிகள். மனம் சார்ந்தது என்றால் அந்த நோயை பற்றிய பயம். அதைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் கருத்துக்கள். மற்றவர்கள் கூறிய சில தகவல்கள். இவை அனைத்தும் அந்த நோயை அதிகப்படுத்துகின்றன.

இது நோய்க்கு மட்டுமல்லாமல், கடந்தகால மனக்காயங்கள், அவமானங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதும், அக உணர்ச்சிகளை நாம் கையில் எடுத்துக்கொண்டு சரிசெய்ய முற்படுவதும் தான் பிரச்னையே தவிர. அது குறித்து நாம் எதுவும் செய்யாமல் (உள் நிலையில் மட்டும்) இருந்தாலே போதுமானது.

எனக்கு நோய் வந்துவிட்டது. நீங்கள் சொல்லியபடி எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து இருக்க சொல்கிறீர்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த கேள்வி உங்கள் மனதில் எழுந்தால் இதை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் வெளி சார்ந்து எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். அதனால் ஏற்படும் உள்நிலை (சோதனைகள் / அவமானங்கள் / கோபம் இன்னும் பிற...) சார்ந்த உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதுகுறித்து விவாதிக்கவோ மறுபரிசீலனை செய்யவோ வேண்டாம். அதனால் எந்த பயனும் இல்லை. மாறாக குழப்பமே மிஞ்சும். உள்நிலையில் நீங்கள் செய்யவேண்டிய ஒரே விஷயம் வெளிநிலையில் நீங்கள் செய்யவேண்டிய வேலையை திறம்பட செய்ய நீங்கள் உள்நிலையை பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வளவுதான்.

நடந்தது நடந்தது தான்; முடிந்தது முடிந்தது தான்; அதை மாற்றி அமைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு அதனோடு முரண்படாமல் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மனம் இலேசாகிவிடும். மனம் இலேசாகிவிட்டால் உடலும் புத்துணர்வோடு இருக்கும். இயற்கைதான் பெரியது என உணர்ந்து சரணாகதி செய்வது மட்டுமே போதுமானது. நீங்கள் பரிபூரண ஆரோக்கியவானாக மாறிவிடலாம். எனவே ஆரோக்கியமாக வாழ்வதும் மன நலத்தோடு வாழ்வதும் அதிசுலபம் தான்.

சுரேஷ் மாணிக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக