ஞாயிறு, மார்ச் 25, 2018

இரகசியம் திரை விலக்கப்படுகிறது...!

பொதுவாக ஒரு பிரச்னை எனக்கு எப்படி உருவாகிறது என்று யோசிக்கும் போது, ஏதோ ஒரு நபர் மூலமாகவோ அல்லது ஒரு சூழ்நிலையாலோ வருவதை உணரமுடிந்தது. இந்த இரண்டின் மூலமாக வரும் இன்பமான உணர்வை பற்றி எனக்கு பெரிய கேள்வி ஏதுமில்லை (இன்ப உணர்வில் இருக்கும் போது ஏன் நான் மட்டும் இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறேன் என்று கேள்வி ஏழாது. எந்த சாமியார பின்னாடியும் நாம் செல்லமாட்டோம். யாருடைய தீட்சையும் நமக்கு தேவைப்படாது. ). ஆனால் இந்த இரண்டின் மூலமாக ஏதாவது துன்பம் தரும் விஷயம் நடந்தால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியும். 

நீண்ட காலமாக இந்த விஷயத்தை கவனித்து வரும்போது இது இல்லாமல் மூன்றாவதாக ஒரு விஷயத்தால் தான் நமக்கு பிரச்னை வருகிறது என்று எனக்கு புலப்பட்டது. இங்கு  என்னை நான் ஒரு ஐஸ் கட்டியாக நினைத்துக்கொள்வேன்.  இப்போது ஒரு சூழ்நிலையாலோ அல்லது ஒரு நபராலோ எனக்கு துன்பம் வருவதாக இருந்தால் நான் நேரடியாக அந்த நபரையோ அந்த சூழலையோ முடிந்தவரை குறை கூறாமல் 360 டிகிரியில் என்னை கவனிக்கும்போது தான் அந்த விஷயம் புலப்பட்டது. இன்னும் தெளிவாக சொல்கிறேன்.

ச்சே! சில பேரை பார்த்தாலே எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது. இவனெல்லாம் எதற்கு உயிரோடு இருக்கிறான். அப்போது அதை காணும் கண் இல்லை என்றால் இதனால் வரும் துன்பம் என்னை பாதிக்காது. ச்சீ! இந்த மாதிரி பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த மாதிரி வார்த்தைகளை என்னால் தாங்கமுடியாது. இப்போது கேட்கும்திறன் எனக்கு இல்லையென்றால் இது ஒரு பிர்சனையாக உருவெடுக்காது. இப்படி ஒவ்வொரு விஷயமாக களைந்து விட்டு வரும்போது கடைசியாக நாம் பிணமானால் எந்த பிரச்னையும் இருக்காது என்று வந்து முடியும். ஆனால் இதற்கு இடைப்பட்ட ஒரு இடத்தில் ஒரு இரகசியம் புதைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது.

இந்த இடத்தில் நான் மறுபடியும் அந்த ஐஸ்கட்டி இடத்திற்கே வந்து விடுகிறேன். ஒரு சூழலோ அல்லது நபரோ என்னை பிரச்னைக்குட்படுத்தும் போது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி கவனிக்கும் போது அது கொஞ்சம் உருகுவதை நான் நன்றாக உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அது உருகி உருகி பிரவாகமாக மாறுவதை உணர்ந்தேன். எப்போது என்னுடைய ஐஸ்கட்டிக்கு அடி விழுகிறது என்று ஆர்வமாக கவனித்த போது நான் மிகவும் நேரம் எடுத்து செலவு செய்யும் விஷயத்தை பற்றி யாராவது ஏதாவது சொன்னாலும், நாம் ஒரு விஷயத்தில் தீவிரமாக நம்பிக்கை வைத்து இருக்கும்போது அதை பற்றி மற்றவர் மட்டமாக சொல்லும்போதும் எனக்குள் பற்றி எரியும். இது மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும். எனக்கு பற்றி எரிகின்ற விஷயம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். உங்களுக்கு பற்றி எரிகிற விஷயம் எனக்கு சாதாரணமாக இருக்கும்.(மனிதர்களுக்கு மனிதர் மாறுபடுவதால் தான் பல பதிவுகளாக நம் கண்முன்னே கொட்டி கிடக்கிறது. வாழ்க்கையின் சுவாரசியமே இந்த முரண்பாடுதான்.)

அப்போது இதற்கு பின்னால் என்ன இரகசியம் ஒளிந்து உள்ளது என்று தீவிரமாக கவனிக்கும்போது, உதாரணத்திற்கு நான் ஒரு பெயர் சொல்ல விரும்பாத (அதை வைத்து ஒரு பெரிய அரசியல் விளையாட்டே நிகழும்) கடவுளை தீவிரமாக நேசிக்கிறேன் என்று வைத்துகொள்ளுங்கள். அந்த கடவுளை யாராவது விமர்சித்தால் எனக்கு கடும்கோபம் வரும். நிதானமாக யோசிக்கும்போது அது கரையும். நான் எந்த அளவுக்கு அதன் மீது பற்றுவைத்துள்ளேனோ அது வரை எனக்கு அடி விழுந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் அது பிரவாகமாக மாறும். அப்போது என் கடவுளை யார் எது சொன்னாலும் எனக்கு துன்பம் வராது. 

அப்போ என் வாழ்க்கையில் நான் எங்கெல்லாம் பற்று வைத்துள்ளேனோ அங்கு சூழ்நிலையாலோ மனிதர்களாலோ வலியாக (கவனிக்காத போது அது வலியாகவும், கவனிக்கும் போது நமக்கு இன்பமாகவும்) அடையாளம் காட்டப்படுகிறது. அதை கவனிக்கு போது அது பிரவாகமாக மாறிவிடுகிறது. ஒரு நேரம் வரும். உயிர் உடலில் இருக்கும்பொழுதே யாராலும் எந்த சூழ்நிலையாலும் உங்களை பாதிக்காத தருணம் வரும். அப்போது நீங்கள் பிரவாகமாகிவிட்டிருப்பீர்கள்...

நன்றி
சுரேஷ் மாணிக்கம்